பதிவு செய்த நாள்
06
செப்
2014
11:09
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் புராண கதையை நினைவுபடுத்தும் வகையில், வாணியர் சமூக நலச் சங்கம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
மதுரை வைகை அணையில் ஏற்பட்ட உடைப்பினை சரிசெய்ய, பாண்டிய மன்னன் பொதுமக்களில் ஒவ்வொருவரும் வந்து கரையை அடைக்க ஆணையிட்டான். அதில், வந்திருந்த அம்மை என்ற வயது முதிர்ந்த பெண்மணிக்கும், கரையை அடைக்க மன்னனின் ஆணை இருந்தது. இப்பெண்மணியால் வேலை செய்ய முடியவில்லை.
இப்பெண்மணிக்கு உதவி செய்ய சிவபெருமான் கூலி ஆளாக வந்து, அம்மையிடம் கூலியாக பிட்டு உணவை உண்டுவிட்டு வேலைக்கு சென்றதாக புராண கதை உள்ளது.
இக்கதை ஆவணி மூலநட்சத்திரத்தில் நடந்ததால், அதனை நினைவு படுத்தும் வகையில், நேற்றுமுன்தினம் கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், வாணியர் சமூக நலச் சங்கம் சார்பில், சிவலோகநாதருக்கு சிறப்பு அபிசேக பூஜை செய்யப்பட்டது. சிவலோகநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மண் சட்டியில் மண்ணும், மம்பட்டியும் வைத்து வழிபட்டு, சிவன் கூலியாக வருவது போன்று சிவனடியார் ஒருவர் வேடம் அணிந்து, மண் பானையும், மம்பட்டியும் எடுத்துச்சென்று, டேம் உடைந்து சென்ற இடத்தில், மண்ணை போட்டு கரையை அடைப்பது போன்ற நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, சிவலோகநாதருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், சிவலோகநாதர் உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வாணியர் சமூக நலச் சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் வெள்ளவிங்கிரி, பொருளாளர் மாணிக்கம் உட்பட பலர் செய்தனர்.