பதிவு செய்த நாள்
10
செப்
2014
12:09
சென்னை: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு, தற்போது மீட்கப்பட்டுள்ள, நடராஜர் மற்றும் அர்ந்தநாரீஸ்வரர் சிலைகளை, ஸ்ரீபுரந்தான், விருத்தாசலத்தில் உள்ள கோவில்களில், வழிபாட்டுக்கு வைக்க வேண்டும் என, மெய்யன்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிலை கடத்தல் மன்னன், சுபாஷ் கபூரால், அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்து, பிரகதீஸ்வரர் கோவிலை சேர்ந்த, 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 31 கோடி ரூபாய் மதிப்புள்ள, நடராஜர் உற்சவர் சிலை மற்றும் விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலை சேர்ந்த, அர்த்தநாரீஸ்வரர் கற்சிலை ஆகியவை கடத்தப்பட்டு, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டன. கடந்த, 1970ம் ஆண்டு, போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிலைகளை மீட்க, தமிழக சிலை கடத்தல் தடுப்பு தடுப்பு பிரிவு போலீசார் பெரும் முயற்சி எடுத்தனர்.
அதன் பயனாக, அரசு முறை பயணமாக, இந்தியா வந்த, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்த சிகைளை ஒப்படைத்தார். இந்த நிலையில், அந்த சிலைகளை எடுத்து வர, சென்னையில் இருந்து, டில்லி சென்றுள்ள, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நாளை அல்லது நாளை மறுதினம், சிலைகளுடன் சென்னை வந்து சேரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழிபாட்டுக்கு எப்போது: நாடு திரும்பியுள்ள, நடராஜர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை, சம்பந்தப்பட்ட கோவில்களில் வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அந்தந்த ஊர்மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த ஜூன், 19ம் தேதி, கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவுக்கு உட்பட்ட வல்லத்தில், திரவுபதி அம்மன், மோகினி, அர்ச்சுனர் சிலைகள் திருடுபோயின. அதுபற்றி, அதேமாதம், 20ம் தேதி, முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, அதேமாதம், 23ம் தேதி, சிலைகள் மீட்கப்பட்டன. அதன்பின், 29ம் தேதி, நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, சிலைகள் அந்தந்த கோவில்களில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நடராஜர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை, அந்தந்த கோவில்களில் வைக்க, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முயற்சி எடுக்க வேண்டும். சிலைகளை, சிறையில் வைப்பது போல், காவல் நிலையத்திலோ, பாதுகாப்பு என்ற ஒற்றை வரியில், வழக்கமாக சிலைகள் வைக்கும் இடத்திலோ வைத்துவிடக் கூடாது. வழக்கு நேரத்தில், நீதிமன்றத்தில் சிலைகளை காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஊர்மக்களாகிய நாங்களே அந்த சிலைகளை, போலீசாரின் அனுமதியுடன் எடுத்து வருகிறோம்; மீண்டும் எடுத்து சென்று வழிபடுகிறோம். இதற்கு தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.