தெப்பத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோயில் நிர்வாகம் முன்வருமா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2014 11:10
அழகர்கோவில்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பொய்கைகரைப்பட்டியில் உள்ள அழகர்கோவில் தெப்பத்திற்கு தண்ணீர் வரும் வகையில் நீர்வரத்து வாய்க்கால்களை துார்வார கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலில் நடக்கும் பல்வேறு விழாக்களில் தெப்பத் திருவிழாவும் ஒன்று. கோயிலில் தெப்பக்குளம் அமைக்க போதிய இடம் இல்லாததால் பொய்கைகரைப்பட்டி அருகில் 300 ஆண்டுகளுக்கு முன் திருமலை நாயக்கர் மன்னரால் தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. தெப்பத்திற்கு தண்ணீர் வரும் வகையில் அழகர்மலை மற்றும் ஆலாமத்து கண்மாயில் இருந்து கால்வாய்கள் அமைக்கப்பட்டன. வரத்து கால்வாய்களை கோயில் நிர்வாகம் பராமரிக்காததால் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியது. தெப்பத்திற்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டது. தண்ணீர் இல்லாத தெப்பக் குளக்கரையில் பெருமாள் வலம் வர வேண்டிய பரிதாபம் ஏற்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கால்வாய்கள் துார்வாரப்பட்டன. இதனால் 2009ல் அழகர்மலையில் பெய்த குறைந்த அளவு மழையிலும் தெப்பம் நிரம்பியதால், 25 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத்தில் எழுந்தரு ளினார் பெருமாள். அழகர்கோவில் பகுதியில் இரு ஆண்டுகளாக மழை இல்லாததால் தெப்பத்திற்கு தண்ணீர் வரவில்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அழகர்கோவில் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கால்வாய்கள் பராமரிப்பின்றி துார்ந்து விட்டதால் தெப்பத்திற்கு இதுவரை நீர்வரத்து இல்லை. கோயில் நிர்வாகம் கால்வாய்களை துார்வாரி தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீர் தேக்க முடியும். இல்லையென்றால் இந்த ஆண்டும் சுந்தரராஜ பெருமாள் தண்ணீர் இல்லாத தெப்பத்தை சுற்றி வலம் வர வேண்டிய நிலை ஏற்படும்.