பரமக்குடி: பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நவ., 7ல் மதியம் 3:00 மணிக்கு ஹோமங்கள் துவங்கி, மாலை 5:30 மணிக்கு மகாபூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, மூலவர் சந்திர சேகரசுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. மாலை 6:30 க்கு அன்னம் மற்றும் பல்வேறு வகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னம் மற்றும் காய்கறிகளால் அம்மன்அலங்கரிக்கப்பட்டார். தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் நடந்தது.
முத்தாலம்மன் கோயிலில் மூலவர் பல்வேறு காய், கனிகளால் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எமனேஸ்வரம், எமனேஸ்வரமுடையவர் கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில், நாகநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல் அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் ஹர.. ஹர.. சிவ.. சிவ.. கோஷம் முழங்க வழிபாடு செய்தனர்.