பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
ப.வேலூர் : பச்சப்பாளி விஜய விநாயகர், பாலமுருகன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏரளாமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ப.வேலூர் அடுத்த அண்ணாநகர் அருகே பச்சப்பாளியில், புதிதாக எழுந்தருளி உள்ள விஜய விநாயகர், பாலமுருகன் மற்றும் பரிவார ஆலயங்களின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பாலமுருகன், விஷ்ணு, துர்கை மற்றும் மலையாள ஸ்வாமிகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, மகா கணபதி, நவகோள், யாகவேள்வி நடந்தது.காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்துவருதல், மாலையில் விநாயகர் வழிபாடு, காப்புக்கட்டுதல் போன்ற நிகழ்ச்சியும், யாகசாலை பிரவேசம், கோபுர கலசம் வைத்தல், கண் திறப்பும் நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, கலசங்கம் புறப்பாடும் நடந்தது.தொடர்ந்து, காலை, 6 மணிக்கு விஜய விநாயகர், பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அபிஷேகம், அலங்காரம், ஸ்வாமி தரிசனம் நடந்தது. விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.