ஆனைமலை : ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காலபைரவர் கோவில்களில் ஐப்பசி மாத வளர்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி பைரவரை தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி ஆனைமலை அருகே அங்கலகுறிச்சி கோபால்சாமி மலை அடிவாரத்தில், ஆத்மநாப வனத்தில் அமைந்துள்ளது காலபைரவர் கோவில். இங்கு வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ரமணமுதலி புதூர் மண்கண்டீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள காலபைரவர்க்கு, கோ பூஜையுடன், சிறப்பு வழிபாடு, பைரவருக்கு சிறப்பு அர்ச்சனையும், 16 வகையான அபிசேகமும் நடந்தன. இதில் ரமணமுதலி புதூர், தென்சங்கம்பாளையம், சோமந்துரை, கோட்டூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நு ாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தி, கோவிலை வலம் வந்து காலபைரவரை தரிசித்தனர்.