பதிவு செய்த நாள்
08
டிச
2014
12:12
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கோவிலில் இந்து சமய அறநிலையத் ஆணையர் தனபால் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதில் கோவில் வளாகத்தில் உள்ள குழந்தையம்மன் சன்னதி, அம்புஜவல்லித்தாயார் சன்னதி பகுதிகளில் உள்ள கிரானைட், மார்பில்ஸ். டைல்ஸ் முதலான கற்களை அகற்றி கருங்கற்களால் தளம் அமைக்க உத்தரவிட்டார்.அர்ச்சகர்கள் பற்றாக்குறை இருந்தால் புதியஅர்ச்சகர்களை நியமிக்கவும், நாதஸ்வர வித்வான், மற்றும் கோவில் பாதுகாவலர் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக நியமிக்கப்பட்ட திருப்பணிக்குழு கமிட்டியின் பதவிக்காலம் முடிவடைந்தது. கும்பாபிஷேகப் பணிகளுக்கு தமிழக அரசு 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததில் நடைபெறாமல் உள்ள சில பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மீண்டும் திருப்பணிக்குழு அமைப்பது குறித்த அரசு ஆலோசனை படி பின்னர் முடிவு செய்யப்படும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர், பணிகளை கண்காணித்து அனைத்து பணிகளும் முடிவடைந்து அறிக்கை அளித்த பின்னர் கும்பாபிஷேகத்திற்கான தேதி குறிப்பிடப்படும்.கோவிலுக்கு நன்கொடை வழங்குபவர்கள் விவரம் ஒளிவு மறைவின்றி பொதுமக்களுக்கு விளம்பர பலகைகள் மூலம் அறிவிப்பு செய்யப்படும் என்றார்.கடலூர் எம்.பி., அருண்மொழித்தேவன், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன், அறநிலையத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ரவி, உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
திட்டக்குடி : அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நேற்று திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, கோவில் ராஜகோபுரம், கொடிமரம், தேர்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.அருண்மொழிதேவன் எம்.பி., இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் முருகன், ஆய்வர் சிவஞானம், மங்களூர் ஒன்றிய சேர்மன் கந்தசாமி, பேரூராட்சி சேர்மன் நீதிமன்னன் உட்பட பலர் உடனிருந்தனர்.