பதிவு செய்த நாள்
02
ஜன
2015
02:01
குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள், சர்ச்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
குன்னூர் மவுன்ட்ரோடு பகுதியில் உள்ள சவுடேஸ்வரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் தங்க ஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சவுடேஸ்வரியம்மனுக்கு பணத்தினால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகல் 12:00 மணிக்கு ஐயப்பனுக்கு மகா நெய் அபிஷேகம், முருகருக்கு கிருத்திகை ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடந்தன.
குன்னூர் விநாயகர் கோவில் ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், 26வது ஆண்டு சிறப்பு அபிஷேகம், அன்னதான விழா நடந்தது.
வண்டிச்சோலை வெங்கடாசலபதி கோவிலில், நடந்த வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல, எடப்பள்ளி ஷீரடி சாய்பாபா கோவில், குன்னூர் தந்திமாரியம்மன் கோவில், துர்கையம்மன் கோவில், ஓட்டுப்பட்டறை முத்தாலம்மன் கோவில், பழைய அருவங்காடு முத்துமாரியம்மன் கோவில் உட்பட பல கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பாய்ஸ்கம்பெனியில் ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், பங்கு குரு ராஜகுமாரன் தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, நேற்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
குன்னூர் அந்தோணியார் தேவாலயம், பேரக்ஸ் சூசையப்பர் தேவாலயம் உட்பட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன.
ஊட்டி எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை மற்றும் புத்தாண்டு சிறப்பு பூஜையில், காலை 10:00 மணிக்கு ஆனந்தமலை முருகன், நவகிரகங்கள், ஏழு ஹெத்தையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டி காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு அனைத்து விக்ரகங்களும் பூஜைகள் செய்யப்பட்டன.