பதிவு செய்த நாள்
02
ஜன
2015
03:01
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு மூலவர் ரங்கநாதருக்கு தைலகாப்பு செய்தனர். நேற்று அதிகாலை 4 மணி முதல் சிறப்பு மந்திரங்கள் வாசித்தனர். 5.20 மணிக்கு ரங்கநாதர் சொர்க்க வாசல் வழியாக வந்தார். ரங்கநாதர் கிரிவல உலா நடந்தது. தாயாருக்கும், ரங்கநாதருக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.
அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தராஜ், டி.எஸ்.பி., முரளிதரன், ஊராட்சி தலைவர் ரங்கநாதன், தேர்திருப்பணிக்குழு குணசேகரன், ஏழுமலை, இளங்கீர்த்தி, தேவராஜ், ஸ்ரீராம் ரங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஜயகுமார் பட்டாச்சாரியார் தலைமையிலான பட்டாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். மேல்மலையனூர் அடுத்த கெங்கபுரம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூதேவி சீதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. வரதராஜ பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் கெங்கணாமண்டபம் புறப்பட்டு சென்று அங்கிருந்து வீதி உலா நடந்தது. அவலூர்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.