பதிவு செய்த நாள்
02
ஜன
2015
04:01
சிவகங்கை : வைகுண்ட ஏகாதசியான நேற்று பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு, புத்தாண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 5:45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப் பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் சொர்க்க வாசலில் காட்சி தந்தார். பிரகாரத்தை சுற்றி வந்து உற்சவ மூர்த்தியாக எழுந்தருளினார். மூலவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். பூஜை ஏற்பாட்டை சீனிவாசன் பட்டர் செய்திருந்தார். காரைக்குடி அரியக்குடி திரு வேங்கடமுடையான் கோயிலில் நேற்று காலை 6 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவேங்கட முடையான் அலங்காரத்தில் காட்சி அளித்தார். கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து, சொர்க்க வாசல் மண்டபத்தில் பக்தர் களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயில் டிரஸ்டி அழகம்மை ஆச்சி தலைமையில், கோயில் நிர்வாக அலுவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர். செஞ்சை அருகே நாகநாதபுரம் கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.
திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று பரமபதவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். அதை தொடர்ந்து கருடவாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். டிரஸ்டி சிவமகாதேவன் தலைமையில் கோயில் அர்ச்சகர் கார்த்திகேயன் பூஜைகள் செய்தார்.
*இளையான்குடியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
*தாயமங்கலம் முத்துமாரி யம்மன் கோயிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இளையான் குடி வாள்மேல்நடந்த அம்மன் கோயில் , ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் , மதன வேணுகோபால பெருமாள் கோயில், சாலைக் கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
*காளையார்கோவில் சுகந்தவன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. காலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் பூஜையுடன் துவங்கியது. சுவாமி வெள்ளி அங்கி அணிந்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோபூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்து காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. மாலை திருமஞ்சன பூஜை நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுகந்தவன பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
*திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. தொடர்ந்து யோகநாராயணப்பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பிரகார வலம் வந்து காலை 6.45 மணிக்கு பரமபதவாசலைக் கடந்தார்.
திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 5 மணிக்குதிருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடந்தன. காலை 8 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் பரமபதவாசலுக்குள் பிரவேசித்தார். திரளாக பக்தர்கள் கூடி தரிசித்தனர்.
*தேவகோட்டை நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோயில், இரவுசேரி மும்முடிநாதர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தன. சிலம் பணி சிதம்பர விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து வெள்ளி அங்கி அணிவிக்கப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. புவனேஸ்வரி அம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஆதிசங்கரர் கோயில், ஜெயங் கொண்ட விநாயகர் கோயில், கைலாச விநாயகர் கோயில், கைலாசநாதர் கோயில் சாய்பாபா கோயில் உட்பட அனைத்து கோயில் களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.