நாகர்கோவில் : சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோயில். இங்கு சிவன்,பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் மூலவராக இருந்து அருள் பாலிக்கின்றனர். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் மார்கழி மற்றும் சித்திரை மாதங்களில் பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா கடந்த மாதம் ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூன்றாம் நாள் விழாவில் இரவு 11 மணியளவில் மக்கள்மார் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகரும், முருகபெருமானும் தங்கள் தாய் தந்தையான சுவாமி- அம்பாளை தரிசிக்கும் நிகழ்ச்சி மக்கள்மார் சந்திப்பு என்று அழைக்கப்படுகிறது.
ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. மொத்தம் மூன்று தேர்கள் வலம் வந்தது. சிறுவர்கள் விநாயகர் தேரையும், பெண்கள் அம்பாள் தேரையும், ஆண்கள் சுவாமிதேரையும் இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்த போது பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி கும்பிட்டனர். தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.