பதிவு செய்த நாள்
10
ஜன
2015
12:01
கோவை: ஆண்களுக்கு சிறந்த துணைவி அமைந்துவிட்டால், சாதாரண ஆத்மாவும் மகாத்மாவாக மாறமுடியும் என, ஆன்மிக சொற்பொழிவாளர் ராஜ்குமார் பேசினார். அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் சாரதாதேவியின் விழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை பஜனையுடன் துவங்கிய விழாவில், அன்னையை பற்றி மாணவியர் உரையாற்றினார். பல்கலை வேந்தர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்து பேசுகையில், ராமகிருஷ்ணரும், அன்னையும் கணவன், மனைவியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இருவரும் ஆன்மிகத்தில் ஈடுபட்டு ஆன்மிக வளர்ச்சிக்கு பாடுபட்டனர். அன்பு, கருணை, தியாகம் போன்ற பண்புகளைக் கொண்ட அன்னை சேவையெனும் ஆயுதம்மூலம் ஆன்மிகத்தை வளர்த்தார் என்றார். ஆன்மிக சொற்பொழிவாளர் ராஜ்குமார் பேசுகையில், அன்னை சாரதாதேவியின் ஆற்றலால், ௧,௦௦௦ விவேகானந்தர்களை உருவாக்க முடியும். ஆண்களுக்கு சிறந்த துணைவி அமைந்துவிட்டால், சாதாரண ஆத்மாவும், மகாத்மாவாக மாறமுடியும். அன்னையின் பணி ஆன்மிகத்தில் துவங்கி, தொண்டில் பூரணமாகிறது; தொடர்ந்து, ஆன்மிகத்தோடு நிறைவடைந்து அனைத்து ஆத்மாக்களின் உள்ளத்திலே கலந்திருக்கிறது என்றார். விழாவில், பேராசிரியர்கள், மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.