மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள புராதன சின்னங்களை பராமரிப்பு செய்ய தொல்லியல் துறையில் போதிய ஊழியர்கள் இல்லாததால் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருமலை நாயக்கர் மகால், கீழக்குயில்குடி சமணர் மலை, யானைமலை, மாங்குளம், அரிட்டாபட்டி, குன்னத்துார் மலை என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 12 இடங்களை தொல்லியல் துறை பாதுகாக்கிறது.இதில் திருமலை நாயக்கர் மகால் பராமரிப்பிற்கு மட்டுமே தொல்லியல் துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற இடங்களில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பை பல ஆண்டுகளாக நம்பி உள்ளது.
தொல்லியல் சின்னங்கள் சிதைக்கப்படும் போது மட்டும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பிரதாயமாக பார்த்து விட்டு செல்வது வழக்கமாக உள்ளது. தொல்லியல் துறைக்கு மாநில அளவில் அதிக வருவாயை தரும் திருமலை நாயக்கர் மகாலைகூட இத்துறையால் முழுமையாக பாதுகாக்க முடியவில்லை. உதவி இயக்குனர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்த இம்மகாலில் இப்போது பத்துக்கும் குறைவான ஊழியர்களே பணிபுரிகிறார்கள்.இதனால் மகாலுக்கு வரும் சமூக விரோதிகள் தங்களது கைவரிசையை அனைத்து இடங்களிலும் காட்டி வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ.3 கோடியில் சீரமைக்கப்பட்ட அனைத்து துாண்களும் இன்று கிறுக்கலாக காட்சியளித்து பொலிவு இழந்துள்ளன. மகாலின் உட்பகுதியை பாதுகாக்க குறைந்தது 10 காவலர்கள் தேவை. ஆனால் 3 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் சமூக விரோத செயல்கள் தொடர்கின்றன. முக்கியமாக, தொல்லியல் சின்னங்கள் உள்ள இடங்களில் அத்துறை ஊழியர்களை நியமிக்க வேண்டும். மகால் போன்ற இடங்களில் தனியார் காவலர்களையாவது நியமித்து மரபுச்சின்னங்களை காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் மதுரையின் வரலாறு பாதுகாக்கப்படும்.