பதிவு செய்த நாள்
16
ஜூன்
2011
11:06
ஈரோடு: நேற்று நள்ளிரவு ஏற்பட்ட முழு சந்திரகிரஹணத்தை முன்னிட்டு, ஈரோடு கோயில்களில் பரிகார பூஜைக்கு பிறகு இன்று நடை திறக்கப்படுகிறது. சந்திரகிரஹணத்தன்று, ஆகம விதிப்படி கோயில் நடை சாத்தப்படும். சந்திரகிரஹணம் முடிந்தவுடன், புண்யாஹவாசனம், கலசபூஜை நடத்தப்பட்டு, கோயில்நடை திறக்கப்படும். அதன் பின், கோவிலின் வழக்கமான பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று நள்ளிரவு 11.56க்கு முழு சந்திரகிரஹணம் ஏற்பட்டது. ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், நடுமாரியம்மன் கோயில், கோட்டை கபாலீஸ்வரர் கோயில், கஸ்தூரி அரங்கநாதர் கோயில், திண்டல் முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களின் நடையும் வழக்கமான நேரமான இரவு 8 மணிக்கு சாத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.04க்கு சந்திரகிரஹணம் மறைந்ததால், கோயில் நடைகள் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பிறகே, தினசரி பூஜைகள் நடக்கவுள்ளன. சந்திரகிரஹணத்தை முன்னிட்டு, ஆயில்யம், கேட்டை, ரேவதி, அனுஷம், மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்கள், விநாயகருக்கும், சந்திர பகவானுக்கும் அரிசி வைத்து சிறப்பு பூஜைகள் செய்தால், தோஷங்கள் நீங்கும், ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.