பதிவு செய்த நாள்
16
ஜூன்
2011
11:06
கோயில்பட்டி : கோயில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. இதையொட்டி கணபதி பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து மகாசங்கல்பம், புண்ணியாவாசனம், கும்பகலச பூஜை, வேதபாராயணம், ருத்திரஜெபம், யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனைகள் நடந்தது. இதையடுத்து வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளை சுப்பிரமணியய்யர் செய்தார். விழாவில் கோயில் நிர்வாகக்கமிட்டி உறுப்பினர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு நெய்தீபம் ஏற்றினர். மேலும் கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட பக்திபாடல்கள் பாடினர். ஏற்பாடுகளை தேவகி, ரவிநாராயணன், லிங்கையா, பிரேமா, பாலாஜி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் கோயில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து மா, மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர், பால் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவிங்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளை ஹரிகரன், மணி ஆகிய பட்டர்கள் செய்தனர். விழாவில் கோயில்பட்டி எம்எல்ஏ ராஜூ, அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் சங்கரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.