சபரிமலை : ஆனி மாத பூஜைகள் முடிந்து, நேற்று சபரிமலை நடை அடைக்கப்பட்டது. கன மழையையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் மாத பூஜை, உற்சவம் போன்றவற்றிற்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், 10ம் தேதி மாலை அய்யப்ப விக்ரக பிரதிஷ்டா தினத்தை ஒட்டி நடை திறக்கப்பட்டது. மறுநாள் பிரதிஷ்டா தின உற்சவம் நடந்தது. அன்றிரவு நடை அடைக்கப்பட்டது. ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை 15ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய வழக்கமான பூஜைகளில் நெய் அபிஷேகம், சந்தன அபிஷேகம் ஆகியவையும் நடந்தது. மேலும், சகஸ்ர கலச பூஜையும், அபிஷேகமும் மூலவருக்கு செய்விக்கப்பட்டது. இது தவிர, நேர்த்திக்கடன் சிறப்பு பூஜைகளாக படி மற்றும் உதயாஸ்தமன பூஜைகள் நடந்தது. கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு தரிசனம் செய்தனர். ஆனி மாத பூஜைகள் முடிந்து, நேற்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் ஆவணி மாத பூஜைக்காக, கோயில் நடை அடுத்த மாதம் (ஜூலை) 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகளுக்குப் பின், 21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.