பதிவு செய்த நாள்
24
மார்
2015
11:03
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலின், இந்த ஆண்டு குண்டம் விழா பூச்சாட்டுடன், நேற்று இரவு துவங்கியது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் ஸ்தலங்களில் இக்கோவில் பிரசித்த பெற்றது.ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்கிழமை, இக்கோவிலின் முக்கிய பண்டிகையான குண்டம் விழா நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு குண்டம் விழா நேற்று இரவு, 11.30 மணிக்கு பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனையடுத்து, பண்ணாரி மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
முன்னதாக, இரவு, 10 மணிக்கு மேல், காளிதிம்பம் கிராம பக்தர்களும், சிக்கரம்பாளையம், வெள்ளியம்பாளையம், புதூர் உள்ளிட்ட பரம்பரை அறங்காவலர்கள், தங்கள் கிராம பக்தர்களுடன், அம்மனிடம் பூ வரம் பெற்றனர்.இதையடுத்து இரவு, 11.30 மணிக்கு குண்டம் விழாவுக்கான பூ வரம் பெறப்பட்டது.இன்று இரவு, நித்தியப்படி பூஜை முடிந்து, பண்ணாரி அம்மன் வீதி உலாவுக்காக சப்பரத்தில் சிக்கரசம்பாளையம் செல்லும். பின் வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம் வழியாக இரவு தொட்டம்பாளையம், கெஞ்சனூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு, பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் வீதிஉலா செல்கிறார்.வீதிஉலா முடிந்து மார்ச், 31ம் தேதி இரவு, கம்பம் சாட்டும் நிகழ்ச்சியும், ஏப்ரல், 7ம் தேதி அதிகாலை, நான்கு மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல், 8ம் தேதி இரவு புஷ்பரதம், 9ம் தேதி மஞ்சள் நீராட்டு, 10ம் தேதி விளக்கு பூஜையும், ஏப்ரல், 13ம் தேதி மறுபூஜையுடன், இந்த ஆண்டு குண்டம் விழா நிறைவடைகிறது. பூச்சாட்டு நிகழ்ச்சிக்காக, நேற்று காலை முதல், கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது.துணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் குண்டம் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும், பூச்சாட்டு நிகழ்ச்சி முடிந்து, அம்மன் நகர்வலம் துவங்கி மீண்டும் பண்ணாரி கோவிலுக்கு செல்லுவதற்குள், கட்டாயம் இப்பகுதியில் மழை பெய்வது ஐதீகம்.இந்த ஆண்டும் மழை வரும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.