பதிவு செய்த நாள்
07
ஏப்
2015
05:04
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், பல ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து, மாரியம்மா, மாரியம்மா என, கோஷம் எழுப்பினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதம், உத்திர நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய் கிழமை, குண்டம் விழா நடப்பது வழக்கம். இவ்விழாவில், தமிழகம், கேரளா, கர்நாடகத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் தீ மிதிப்பர். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா, கடந்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி, 24ம் தேதி முதல், பண்ணாரி மாரியம்மன் சப்பரம் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு சென்றுவிட்டு, கடந்த, 3ம் தேதி பண்ணாரி கோவிலை அடைந்தது.
உடன் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல், அதிகாலை நடந்தது. நேற்று அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பண்ணாரி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, குண்டத்தில் பரப்பி வைக்கப்பட்ட வேம்பு மற்றும் ஊஞ்சல் மரத்துக்கு தீ வைத்து, அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. பண்ணாரி மாரியம்மன் (மூலவர்), கையில் வீணையுடன் அருள் பாலித்தார். அதிகாலை சரியாக, 3.45 மணிக்கு கோவிலின் தலைமை பூசாரி ராஜசேகர் தீ மிதித்தார். முன்னதாக, குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தார். ராஜசேகரை தொடர்ந்து, பூசாரிகள் ராஜேந்திரன், ஆறுமுகம் ஆகியோர் தீ மிதித்தனர். பின், சப்பரத்தை சுமர்ந்தபடி நால்வரும் தீ இறங்கினர். இவர்களை தொடர்ந்து கடந்த, 1ம் தேதி முதல் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் தீ மிதித்து, தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.