பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
11:04
செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தமிழ் புத்தாண்டை ஒட்டி, செவ்வாடை பக்தர்களுக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை, பங்காரு அடிகளார், நேற்று வழங்கினார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், மன்மத தமிழ் புத்தாண்டு விழா, கடந்த 13ம் தேதி துவங்கியது. இந்த விழாவில், இலவச சித்த மருத்துவ முகாம், கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றன. அதை தொடர்ந்து, நேற்று அதிகாலை காலை 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, செவ்வாடை பக்தர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் இலவச திருமணங்கள் நடைபெறும் விழாவிற்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், தலைமை தாங்கினார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார், முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கொண்டாரெட்டியார், வரவேற்றார். பங்காரு அடிகளார், 640 செவ்வாடை பக்தர்களுக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், சோத்துப்பாக்கம் நடுநிலைப் பள்ளிக்கு, 75 கல்வி உபகரணங்களும், 17 அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், சித்த மருத்துவத்திற்கு, 1.08 லட்சம் ரூபாய்; அன்னை இல்லத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய்; முடநீக்கவியல் கல்லூரிக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கி, 22 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்து, சீர்வரிசைகளை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், சித்தர்பீட புலவர் சுந்தரேசன் உட்பட, பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.