பதிவு செய்த நாள்
29
ஜூன்
2011
04:06
வாழ்க்கைக்கு ஒழுக்கம் மிக அவசியம். ஒழுக்கமே ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மேம்படுத்தும். ஒழுக்கமுள்ள வாழ்வு வாழ இறைவனின் அருளும் நமக்குத் தேவை. ஓரிடத்தில் விளக்கு இருப்பது நமக்குத் தெரிந்தால் தானே, அந்த விளக்கை ஏற்றி வைத்து நம்மால் வெளிச்சத்தைப் பெற முடியும். விளக்கு எங்கே இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவும் நமக்கு ஒரு வெளிச்சம் தேவைப்படுவதைப் போல, இறைவனை வணங்கவும், வாழவும் இறைவனின் அருள் நமக்குத் தேவை. இதை மாணிக்கவாசப் பெருமான் தமது சிவபுராணத்தில்,
அவனருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் ஓய உரைப்பன் யான்
எனப் பாடி பரவசப்படுகிறார். இறைவனை வழிபடவும் இறைவனின் அருள் இருந்தால் தான் முடியும். அப்படிப்பட்ட இறையருளைப் பெற ஒழுக்கம் நிறைந்த வாழ்வு நமக்கு வழிகாட்டுகிறது. அதற்கு நாள்தோறும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். நல்லனவற்றையே எண்ணி, நல்லனவற்றையே பேச வேண்டும். அப்படிச் செய்யும் போது மனம் இறைவன் அருள்பெற ஏதுவாகிறது. மனம் பண்பட்டவுடன் இறையருள் அங்கே உதயமாகிறது. பண்பட்ட நிலம் பயிர்த்தொழிலுக்கு ஏற்றதாகிற மாதிரி, பண்பட்ட உள்ளம் வழிபாட்டுக்கு ஏற்றதாகிறது. அப்படி பண்பட்ட உள்ளத்தினை உடையவர்கள் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் இறைவனை வழிபட வேண்டும். இறைவனிடம் இடைவிடாத பக்தி செலுத்த வேண்டும். நல்ல மனத்தையும் நல்ல சிந்தனையையும் அருளும்படி இறைவனிடம் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும். ஒழுக்கம் அவரவர் நிலைக்கு ஏற்றபடி மாறும்.
முனிவர்களின் ஒழுக்கம் துறவறம் மேற்கொள்வது; பண்டிதனின் ஒழுக்கம் தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுப்பது; மாணவர்களின் ஒழுக்கம் குருவின் சொல்படி நடத்தல். இப்படி ஒழுக்கம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒழுக்கமான வாழ்வுக்கு மனம் அடங்கப் பெறல் வேண்டும். இறைவனை நினைக்கும்போது மட்டும் மனம் அடங்குகிறது. மனம் அடங்கினால் நம் அகங்காரத் துடிப்புகள் அடங்கி இறைவனுடன் ஒன்ற முடிகிறது. இறைவன் மட்டுமே இன்ப துன்பங்கள், விருப்பு வெறுப்புகள், லாப நஷ்டங்கள் நல்லது தீயதுகள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன். வேறு உலகப் பொருள்களும், பந்தங்களும் அவற்றின் மீது பிரியம் வைக்கும் மனிதனையும் பந்தப்படுத்தி விடுகின்றன. அதனால் பிறவித் தளையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான். எனவே, பற்று அற்றவனாகிய இறைவன் மீதே நாம் பற்று வைக்க வேண்டும். இறைவன் தன்னிடம் வந்து சேர்கின்ற இறையடியார்களைத் தன்னுடைய அருள் என்னும் தீயால் எரித்து, பாவங்களைப் போக்கி, தூய்மைப்படுத்துகிறான். அவனால் மட்டுமே அது முடியும். இறைவனை நினைப்பதால் இறைவனைப் போலவே ஆகிவிட முடியும். இறைவனைப் போன்று பேரானந்தமயமாய் விளங்க முடியும். இறைவன் நித்தியானந்தனாய் விளங்குபவன், அழிவு என்பதே இல்லாதவன்; அழியும் இயல்பு உடைய நம்மை அழியாமல் காக்க அவனால் மட்டுமே முடியும். அவன் தூய்மையே வடிவெடுத்தவன். வினைப்பயனால் விளைந்த பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் நம்மை பரிசுத்தமாக்க அவனால் மட்டுமே முடியும். அவன் மீது பக்தி செலுத்தி அவன் மயமாக மாற வாய்ப்பிருக்கும் போது ஏன் நாம் உலக விவகாரங்களில் சிக்கிக் கொண்டு திணற வேண்டும்? ஒழுக்கம் நிறைந்த வாழ்க்க வாழ்ந்து, மனத்தைத் தூய்மைப்படுத்தி அதனை இறைவன் உறையும் ஆலயமாக ஆக்குவோம்.