பதிவு செய்த நாள்
29
ஜூன்
2011
04:06
உயிரைக் காக்க அக்காலத்தில் மன்னர்கள் இரும்புக்கவசம் அணிந்து கொண்டனர். அதுபோல, கவச நூல்களைப் பாராயணம் செய்தால் நம்மைச் சுற்றி தெய்வத்தின் மந்திரசக்தி கவசமாகத் துணைநிற்கும் என்பர். கவசப்பாடல்களில் கந்தசஷ்டி கவசம் மிகவும் புகழ்பெற்றது. தேவராய சுவாமிகளால் எழுதப்பட்ட இந்நூல், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அரங்கேற்றப்பட்டது. காங்கேயத்தை மையமாகக் கொண்டு சென்னிமலை, ஊதிமலை, வட்டமலை, சிவன்மலை,திருமுருகன்பூண்டி ஆகிய மலைகள் உள்ளன. இவற்றில் தலைசிறந்தது சென்னிமலை. சென்னி என்ற சொல்லுக்கே தலை என்று தான் பொருள். சிரகிரி, சென்னியங்கிரி, புஷ்பகிரி, சிகரகிரி என்ற பெயர்களும் இதற்குண்டு. தேவராய சுவாமிகள் கவசத்தில் சிரகிரி வேலா சீக்கிரம் வருக! என்று இத்தல முருகனை வேண்டுகிறார். இங்கு மூலவராக கைலாசநாதரும், பெரியநாயகியும் வீற்றிருக்கின்றனர். புண்ணாக்குச் சித்தருக்கு சமாதியும் இங்குள்ளது. கந்தசஷ்டியும், தைப்பூசமும் சிறப்பான விழாக்கள். அக்னிஜாத சுப்பிரமணியர், சவுரபேய சுப்பிரமணியர், சரவணபவன், தேவசேனாதிபதி ஆகிய பெயர்களிலும் முருகப்பெருமான் கோஷ்டத்தில் வீற்றிருக்கிறார்.