சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி சிம்மவாகனத்திலும் பவனி வருகின்றனர். இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைப் புரிகிறார். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தைக் குறிப்பதாகும். மரத்திற்கு வேர் ஆதாரமாகவும், அதன் கிளைகள், இலைகள் எல்லாம் மேலே பரவி இருப்பது போல இறைவன் உலகிற்கு ஆதாரமாகவும், அவரைச் சார்ந்து 84 லட்சம் வகை உயிரினங்கள் எங்கும் பரவி இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. கேட்ட வரத்தைக் கொடுப்பதற்காக சுவாமி கற்பக விருட்சத்தில் பவனி வருகிறார். விரும்பியதை அடைந்து விட்டால், மனதில் அகங்காரம், தற்பெருமை ஆகிய அசுர குணங்கள் உண்டாகி விடும். அதைப் போக்கி நம் மனதை நல்வழியில் திருப்புவதற்காக மீனாட்சி சிம்ம வாகனத்தில் பவனி வருகிறாள். எல்லாம் கிடைத்து விட்டது என்று ஆணவம் கொள்ளாதே! கவனமாக இரு! என்று சிங்கத்தின் மூலம் நமக்கு எச்சரிக்கை செய்கிறாள். இந்த அரிய தத்துவத்தை உணர்ந்து அம்மையப்பரை தரிசித்து அருள் பெறுவோம்.