மிகப் பழங்காலத்தில் இருந்தே விளக்கேற்றுவது என்பது வழிபாட்டின் முக்கியமான பகுதியாக இருந்திருக்கிறது. வீட்டில் மகாலட்சுமி என்றும் நிலைத்திருக்க விளக்கு ஏற்றுதல் மிகவும் அவசியம். அதாவது, பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. சூரிய உதயத்துக்கு ஒரு நாழிகை முன்னாலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு ஒரு நாழிகை முன்னாலும் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) விளக்கு ஏற்ற வேண்டும்.இரவு, பகல் மாற்றம் ஏற்படும்போது சுற்றுப்புற சூழலில் நிகழும் சில மாற்றங்களால் விஷ பாதிப்பு உண்டாகும். விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் இந்த பாதிப்பை தடுக்கவல்லது. இதை முன்னிட்டே அதிகாலையிலும், மாலையிலும் விளக்கு ஏற்றச் சொன்னார்கள் நம் முன்னோர்கள். தினசரி இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கில் ஐந்துமுக தீபம் ஏற்றி, மகாலட்சுமி பூஜை செய்வது மிகவும் சிறந்தது. சில பரிகாரங்களுக்காக மண்ணாலான அகல விளக்கில் நெய் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது. தீபம் ஏற்ற பஞ்சு திரியே மிகவும் சிறந்தது. நல்லெண்ணெய், நெய் இவற்றைப் பயன்படுத்தி விளக்கேற்ற மங்கலம் நிலைக்கும்.