பதிவு செய்த நாள்
18
ஜூன்
2015
11:06
திருப்பூர்:திருப்பூர், கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் ராஜகோபுரம் பணி பாதியில் நிற்கிறது; முழுமையாக செய்து முடிக்க, அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூர் நகரில், 1,200 ஆண்டுகள் பழமையானதும், பாடல் பெற்ற தலமாகவும், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் உள்ளது. பால மரங்கள் நிறைந்த மலையில், இது அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு, நான்கு ஆண்டுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பணியின்போது, கோவிலுக்கு முன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வந்த ராஜகோபுரம் பணி, பாதியில் நிறுத்தப்பட்டது.முழுவதும் கற்களால், மூன்று நிலை ராஜகோபுரம் பணி துவக்கப்பட்டு, இரண்டு அடுக்கு பணி மற்றும் சுதை வேலைப்பாடுகள் செய்யப்படாமல், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதற்காக கட்டப்பட்ட சாரங்கள், செதுக்கப்பட்ட கற்கள் அனைத்தும், கோவில் வளாகத்தில் வீணாக கிடப்பதால், பக்தர்கள் வேதனை அடைகின்றனர். பணியை உடனடியாக துவக்கி, விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "திருப்பணிக்குழு மூலம், உபயதாரர்கள் பங்களிப்புடன், ராஜகோபுரம் பணி துவங்கியது; சில காரணங்களால் தடைபட்டுள்ளது. உபயதாரர்களை மீண்டும் இணைத்து, நிதி திரட்டி, கோபுரத்தை முழுமையாக கட்ட நட வடிக்கை எடுக்கப்படும், என்றனர்.