பதிவு செய்த நாள்
08
ஜூலை
2011
03:07
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டு ஒவ்வொரு மாதிரி அமைவதுண்டு. ஒரு ஆண்டு முடிந்து இன்னொரு புத்தாண்டு பிறக்கும் சமயத்தில், இந்த ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்குமோ என்று மனதில் சஞ்சலமும், எதிர்பார்ப்பும் ஏற்படுவதுண்டு. சென்றவருடம், செழிப்பாய் இருந்தேன். இந்த வருடமும் அதேபோல் இருக்க வேண்டுமே என்று புத்தாண்டை இனிய முகத்தோடு வரவேற்பவர்களுமுண்டு. சென்ற ஆண்டு பட்டதே போதுமடா சாமி, இந்த ஆண்டாவது நிம்மதியாய் இருக்க ஆண்டவனே எனக்கு அருள்புரிவாய் என்று அழுது புலம்புபவர்களும் உண்டு. ஆங்கிலப் புத்தாண்டை ஆவலோடு அமோகமாகக் கொண்டாடும் நம் தமிழர்களுக்கு, தமிழ்ப்புத்தாண்டையும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் ஏனோ ஏற்படுவதில்லை. அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களையும் முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? கேரளத்தில் விஷுவுக்கு, ஆந்திராவில் யுகாதிக்கும் என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து வைத்திருப்பவர்கள் கூட ஒருசிலர் மட்டுமே.
ஒவ்வொரு நாட்டிற்கும், அவரவர்கள் மொழி கலாச்சார வழக்கப்படி காலம் - நேரம் போன்றவற்றை கணக்கிடுகையில், ஆண்டுகள், வரிசைப்படி வருவதுண்டு மோதுவதுண்டு. தமிழ் கலாச்சாரப்படியும்,சம்பிரதாயப்படியும் சித்திரை முதல் தேதி தமிழ் வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகக் கலாச்சாரப்படி தமிழ் வருடப்பிறப்பை எப்படி யெல்லாம் கொண்டாடவேண்டுமென்று நமது பெரியோர்களும், தமிழ் அறிஞர்களும் சில வதிமுறைகளையும், வழிமுறைகளையும் வகுத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். இதில் முக்கியமானது பஞ்சாங்கப் படனம் என்பது. மனிதனின் வாழ்வை அவனது ஜாதகம் எப்படி கணிக்கிறதோ, அதுபோல ஒருவருடத்தின் பாலபலன்கள், நன்மை தீமைகளை விவாஹ சக்ர, திதிநேத்ர, ஜீவமூர்த்தி, கிரஹ மூர்த்திகளை வழிபட்டு, வரவேற்று, எல்லோருக்கும் தெரிந்து கொள்ளும்படியாக அந்த பஞ்சாங்கத்தை இறைவன் முன்பு வைத்துப் படிப்பதே பஞ்சாங்கப் படனம் என்று அழைக்கப்படுகிறது.
ஓருநாட்டின் காலநேரம், வறுமை, செழுமை என எத்தனையோ விஷயங்கள் நமக்கு விஞ்ஞான ரீதியாகத் தெரிந்திருந்தாலும், அவைகளை விஞ்ஞானம் சொல்வதற்கு முன்பே பஞ்சாங்கம் சொல்லிவிடுகிறது. எனவே, இந்தப் பஞ்சாங்கத்தை ஒரு கோயிலில் அதிகாலை வேளையிலே தூய்மையுடன் இறைவன் முன்பு வைத்து பூஜித்துவிட்டு படிக்க வேண்டும். தெய்வீகக் காரியங்களில் ஈடுபட்டுள்ள ஸத்சங்க நிர்வாகிகளோ, இறைபக்தியில் ஈடுபாடு கொண்ட பெரியோரோ, மரியாதைக் குரியவர்களோ இந்தப் பஞ்சாங்கத்தை ஊர்மக்கள் முன்னிலையில் படித்து, அந்த ஆண்டின் முக்கிய பண்டிகைகள் வரும் நாள், நல்ல காரியம் தொடங்க நல்ல நாள், முகூர்த்த வேளை போன்ற விவரங்களை விளக்கமாகக் கூற வேண்டும். திதியைப் போற்றினால் ஐஸ்வரியம் கிட்டும். வாரம், நான் போன்றவற்றை ஆராதனை செய்தால், தீர்க்கமான ஆயுள் நிறைந்திருக்கும். நட்சத்திர பூஜை செய்தால், கர்மவினைகள், நோய்கள் நீங்குகின்றன. கரணதேவதையைப் பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. அன்றைய தினம் குடும்பத்தினர் அனைவரும் நீராடி, புத்தாடை அணிந்து, தூய உள்ளத்துடன் தூய்மையாக அந்த ஆண்டின் அதிதேவதை முன்பு ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியை வைத்து, அக்கண்ணாடிக்குப் பொன்னால் அலங்காரம் செய்து பொட்டிட்டு, பூவிட்டு, பழவகைகளை வைத்து, விளக்கேற்றி அக்கண்ணாடியில் இவைகளைக் கண்டுகளித்து அந்த வீட்டின் மூத்த தம்பதியர் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற வேண்டும். இப்படிச் செய்து இறைவனை பிரார்த்தனை செய்தால் நாட்டில் நல்ல மழை பெய்யும். செல்வம் செழிக்கும். தர்மம் என்பதும் நிலைத்திருக்கும்.