பதிவு செய்த நாள்
13
ஜூலை
2015
11:07
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தேருக்கு நிரந்தர "ஷெட் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு மதுரை மீனாட்சி கோயில் நிதியில் இருந்து ரூ. 17 லட்சம் செலவில் புதிய தேர் அமைக்கப்பட்டுள்ளது. தேர் 27 அடி உயரம், இரும்பு அச்சுக்கு மேல் ஐந்து அலங்கார அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் அடுக்கில் கதலிநரசிங்கப்பெருமாள், சிவன், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களின் சிற்பமும், 2 ம் அடுக்கில் சிற்ப வேலைகளும், 3 ம் அடுக்கில் பெருமாளின் அவதாரம், 4 ம் அடுக்கில் தேவாசனம் மற்றும் ஆழ்வார் அவதாரம், 5 ம் அடுக்கில் உற்சவர் அமரும் சிம்மாசன பீடம் மற்றும் தசாவதார சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு, பெயின்டிங் செய்யப்பட்டு நான்கு இரும்பு கரங்களுடன் தேர் மிகவும் அழகான கம்பீர தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தேருக்கு "ஷெட் அமைக்காததால் மழை, வெயிலால் பாதிப்புக்குள்ளாகிறது. கடந்த ஆண்டு தற்காலிகமாக பாலிதீன் கவர் போட்டு மூடி வைத்திருந்தனர். பலத்த காற்றால் இது சேதம் அடைந்து விட்டது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட தேருக்கு சில ஆயிரங்கள் செலவு செய்து ஷெட் அமைக்க தயக்கம் காட்டி வருகின்றனர். நிரந்தர "ஷெட் அமைத்து தேரை பாதுகாக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.