நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் பாரத மாதா மற்றும் வீர ஆஞ்சநேயர் சிலைகள் நிறுவப்பட்டன. கேந்திர வளாகத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் ராமாயண காட்சி கூட்ம் அமைக்கும் பணி ரூ.12 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. இங்கு 108 மூலிகை ஓவியங்கள் வரையப்படுகின்றன. வீர ஆஞ்சநேயர் மற்றும் பாரத மாதா சிலைகள் நிறுவ முடிவு செய்யப்பட்டு மகாபலிபுரத்தில் சிலைகள் வடிவமைக்கப்பட்டன. வீர ஆஞ்சநேயர் சிலை 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காட்சி கூடத்தின் உள்ளே ஐம்பொன்னிலான பாரதமாதா சிலையும், நுழைவு வாயிலில் வீர ஆஞ்சநேயர் சிலையும் நேற்று நிறுவப்பட்டன. இதில் விவேகானந்தா கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன், தலைமை அலுவலக செயலாளர் ரகுநாதன் நாயர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான திறப்பு விழா டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.