பதிவு செய்த நாள்
08
செப்
2015
12:09
ரெட்டியார்சத்திரம்: கோபிநாதசுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில் முன்பு ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வழுக்குமரம் ஏறினர். இவ்விழா செப். 3ல் உறிமரம் நடுதலுடன் துவங்கியது. செப். 5ல், சிறப்பு பூ ஜைகளுக்குப்பின், கோபிநாதசுவாமி உற்சவர் திருமலையிலிருந்து புறப்பாடு நடந்தது. மூன்று நாட்களாக, இராமலிங்கம்பட்டி, கட்டச்சின்னான்பட்டி உள்பட பல கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளல் நடந்தது. சுவாமியின் அலங்கார ரதம் நேற்று, கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில் வந்தடைந்தது. விசேஷ பூஜைக்குப்பின், கோயில் முன்புறம் 40 அடிஉயர வழுக்குமரம் ஊன்றப்பட்டது. பெரு மாளுக்கு, விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முக்கியஸ்தர்கள் அழைப்பைத் தொடர்ந்து, மாலை 5.15 மணிக்கு வழுக்கு மரம் ஏறுதலில், வேலம்பட்டியைச்சேர்ந்த இளைஞர்கள் ஏறினர். ஒரு மணிநேர முயற்சிக்குப்பின், கருப்பன், 22, வழுக்குமர உச்சியில் இருந்த பரிசுமுடிச்சை அவிழ்த்தார். பின்னர், தயிர், வெண்ணெய் கலயங்களுடன் உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செயல் அலுவலர் ராமசாமி ஏற்பாடுகளை செய்திருந்தார்.