பதிவு செய்த நாள்
11
செப்
2015
10:09
மைசூரு:“மைசூரு தசரா ஜம்பு சவாரியின் போது, வெளி மாநில கலாசார குழுக்கள், அலங்கார ஊர்திகளுக்கு அனுமதியில்லை. டார்ச் லைட் பரேடில் நடத்தப்படும், வாண வேடிக்கை ரத்து செய்யப்படுகிறது” என, மாநில அமைச்சர் சீனிவாஸ் பிரசாத் தெரிவித்தார். மைசூரு தசரா விழாவின் லோகோவை, அறிமுகம் செய்த, வருவாய் துறை அமைச்சர் சீனிவாஸ் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:தசராவுக்காக மைசூருவுக்கு வந்த யானைகளுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட யானைகள் குழு, இம்மாதம், 3வது வாரத்தில், வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, இந்தாண்டு தசரா விழாவை எளிமையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துஉள்ளது.
தசரா விழாவை விவசாயி ஒருவரை வைத்து துவக்க, முதல்வர் சித்தராமையா தலைமையிலான தசரா விழா கமிட்டி முடிவு செய்துள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் நடக்கும் கலாசார நிகழ்ச்சிகளை முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். டார்ச் லைட் பரேடில் நடத்தப்படும், வாண வேடிக்கை இந்த ஆண்டு இடம் பெறாது. கடந்தாண்டு கலாமந்திர், மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் நடந்து வந்த கலாசார நிகழ்ச்சிகளும், இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது; ஆனால், விவசாயிகள் தசரா நடக்கும்.ஜம்பு சவாரியின் போது, வெளி மாநில கலாசார குழுக்கள், அலங்கார ஊர்திகளுக்கு அனுமதியில்லை; ஆனால், உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.