பதிவு செய்த நாள்
15
செப்
2015
10:09
மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் வளாகத்தில், கோவில் நிர்வாகத்தின் அனுமதியின்றி, அலுவலர்களை மிரட்டி, தனியாரால் மண்டபம் கட்டப்படுவதாக, கோவில் நிர்வாகம், போலீசில் புகார் அளித்துள்ளது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலம். நிலம், மகப்பேறு ஆகியவற்றுக்கு, தோஷ பரிகார தலமாகவும் விளங்கி, தற்போது பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர்.
நிர்வாக அனுமதியின்றி...: அந்த கோவிலில், ராஜகோபுரத்தின் முன்புறம், மண்டபம் இன்றி திறந்தவெளியாக உள்ளது. பிரம்மோற்சவ விழா உட்பட, பல்வேறு உற்சவங்களின்போது, அங்கு தற்காலிக பந்தல் அமைக்கப்படும்.இந்த நிலையில், பாகவதர் ஒருவர், நன்கொடை வசூல் மூலம், 16 கால் மண்டபம் அமைக்க முடிவெடுத்து, இதுதொடர்பாக, சமீபத்தில் கோவில் நிர்வாகத்தை அணுகினார். கோவில் நிர்வாகம், தொல்லியல் சின்னங்களில் ஒன்றாக கோவில் உள்ளதால், கட்டுமானத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதை கூறி, அறநிலைய துறை, தொல்லியல் துறை ஆகியவற்றின் அனுமதி பெற்றே அமைக்க வேண்டிய நிலையை விளக்கியது.
போலீசில் புகார்: ஆனால், அதை புறக்கணித்த பாகவதர், நிர்வாக அனுமதியின்றி, கடந்த சில நாட்களுக்கு முன், கருங்கல், ஜல்லிகள், மணல் ஆகியவற்றை கோவில் வளாகத்தில் குவித்தார். மண்டபத்திற்கு கான்கிரீட் துாண்கள் அமைக்க, ஜே.சி.பி., மூலம் பல அடி ஆழ பள்ளம் தோண்டி, பணிகளை துவக்கினார்.நிர்வாக அனுமதி இன்றி, நன்கொடை பணியை செய்யக்கூடாது என, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் தடுத்தும், அவர் உள்ளூர் பிரமுகர்களை வரவழைத்து, நிர்வாகத்தினரை மிரட்டி, மண்டப பணியை தொடர்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் கூறியதாவது: கோவில் நிர்வாகம், அன்னதான கூடம், பூதத்தாழ்வார் மண்டபம் அமைக்க முடிவெடுத்தும், தொல்லியல் துறை தடையால், அந்த பணிகளே முடங்கி கிடக்கின்றன. பாகவதர், எங்கள் அனுமதி இல்லாமல், மண்டபம் கட்டுகிறார்; நாங்கள் தடுத்தும், ஆட்கள் மூலம் எங்களை மிரட்டுகிறார்; இதுபற்றி, போலீசில் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தடுப்பது ஏன்?: இதுகுறித்து, மண்டபம் அமைத்து வரும், நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் பாகவதர், 71, கூறியதாவது:நான் சிலருடன் இணைந்து, பக்தர்கள் வசதிக்காகவே, மண்டபம் அமைக்கிறேன். இதற்காக என்னிடம் கடிதம் பெற்ற கோவில் நிர்வாகம், கடந்த மாதம் 27ம் தேதி பூஜைக்கும் அனுமதித்து, இப்போது ஏன் தடுக்கின்றனர் என, தெரியவில்லை; ஊர்மக்கள் ஆதரவு கொடுப்பதால், கட்டுமான பணியை தொடர்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.