பதிவு செய்த நாள்
18
செப்
2015
11:09
பெங்களூரு: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், பெங்களூரின் பல பகுதியினர், பசுமை விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடினர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், அதிகாலையிலேயே பூஜைகள் துவங்கின. ஏராளமானோர், கோவிலுக்கு சென்று, விநாயகரை வழிபட்டனர். வீடு தோறும் விநாயகர் சிலைகளை வைத்து, பலரும் பூஜை செய்தனர். இம்முறை, ரசாயன கலவைகளால் செய்யப்பட்ட வண்ண விநாயகர் சிலைகளை வாங்குவதை விட, களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வாங்குவதில், பலரும் அதிக ஆர்வம் காண்பித்தனர். இதுகுறித்து, கடந்த சில நாட்களாக, இயற்கை ஆர்வலர்களும், மாணவர்களும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதனால், பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்cயப்பட்ட, விநாயகர் சிலைகள் விற்பனை குறைந்தது. பல்வேறு அபார்ட்மென்ட்களில், குழந்தைகள் ஒன்று கூடி, ஆர்வத்துடன், தாங்களாகவே, பசுமை விநாயகர் சிலைகளை உருவாக்கி, பூஜித்து கொண்டாடினர்.
வழக்கம் போல், நகரின் பல பகுதிகளிலும், தெருவோரங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர். பலரும் நேற்று மாலையே சிலையை கரைத்தனர். விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக, அடுத்த, 11 நாட்களுக்கு, தேவையான ஏற்பாடுகளை, பி.பி.எம்.பி., செய்துள்ளது. பெங்களூரு நகரப்பகுதிகளில், 36 ஏரிகளில், சிலைகளை தனியாக கரைக்க, செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர, சிறிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக, மொபைல் டாங்குகள் நகர் முழுவதும் வலம் வந்தன. சிலைகளை வாங்கி, குறிப்பிட்ட இடத்தில் கரைப்பதற்காக, பி.பி.எம்.பி., ஊழியர்களும் அமர்த்தப்பட்டு இருந்தனர். ஒவ்வொரு சிலை கரைப்பு பகுதியிலும், வெளிச்சத்திற்கு விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. சிலைகளை மட்டுமே தண்ணீரில் கரைக்க வேண்டும் என்பதற்காக, சிலைகளின் மீதுள்ள பூக்கள் மற்றும் பொருட்களை அகற்ற, துப்புறவு பணியாளர்களும் பணியில் ஈடுபட்டனர். விநாயகர் பண்டிகையை முன்னிட்டு, பழங்கள், பூஜை பொருட்களின் விலை உயர்ந்திருந்தாலும், மக்கள், விழாவை கொண்டாடி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.