பதிவு செய்த நாள்
08
அக்
2015
11:10
மதுரை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, மலையடிவாரம் மற்றும் வாழைத்தோப்பில் ரூ.1.34 கோடியில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஒன்றரை மாதங்களில் முடிக்க கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.இக்கோயிலுக்கு செல்லும் வழிகளில் ஒன்று வாழைப்தோப்பு. இதன் வழியாக ஆடி அமாவாசை தினத்தன்று 2 லட்சம் பேர் கோயிலுக்கு செல்வர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில், 2 ஆயிரம் பேர் செல்வர். இவர்களுக்காக வாழைத்தோப்பில் ரூ.30 லட்சத்தில் ஓய்வறை, கழிப்பறைகள், ரூ.4 லட்சத்தில் மருத்துவ முகாம் கட்டடம், ரூ.5 லட்சத்தில் உயர்மின் அழுத்த விளக்கு, மலையடிவாரத்தில் ரூ.30 லட்சத்தில் பக்தர்கள் ஓய்வறை, ரூ.8 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்படுகின்றன. இதை ஆய்வு செய்த கலெக்டர் சுப்பிரமணியன், ஒன்றரை மாதங்களில் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.அவர் கூறியதாவது: இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில், பக்தர்களுக்காக ரூ.1.34 கோடியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன. ஓய்வறைகளில் 500 பக்தர்கள் தங்கலாம். மருத்துவ முகாம் அனைத்து நாட்களிலும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரோகிணி, அதிகாரிகள் உடன் சென்றனர்.