பதிவு செய்த நாள்
31
அக்
2015
10:10
சோழர் காலத்தில் கட்டப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரன் கோவில், பராமரிப்பின்றி, அழியும் நிலையில் உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், செஞ்சியில் உள்ள, ஜனமேஜய ஈஸ்வரன் கோவில், முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, ஒரு வேளை பூஜை திட்டத்தில், பூஜை நடந்து வந்தது. அதுவும் தற்போது நடைபெறவில்லை. இதுகுறித்து, கூவம் நதிக்கரையில் உள்ள சிவன்கோவில்கள் குறித்து ஆய்வு செய்து வரும், பத்மபிரியா பாஸ்கரன் கூறியதாவது:முதலாம் குலோத்துங்கன் கட்டிய, ஜனமேஜய ஈஸ்வரன் கோவிலின் சிற்பங்கள் அனைத்தும் கலைநயம் மிக்கவை. இந்த கோவிலில் விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன. கோவிலுக்கு சொந்தமாக உள்ள பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. கோவிலை முறையாக பராமரிக்காததால் விமானங்களில் செடிகள் வளர்ந்து உள்ளன. கோவிலை அறநிலையத் துறையும் தொல்லியல் துறையும் கவனத்தில் கொள்வதில்லை. அழிவின் விளிம்பில் உள்ள, அந்த கோவிலை சீரமைத்து பராமரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -