(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)
1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் இல்லம் துறந்தான் அவனின் சதகோடி உள்ளித் துறவுடையோன்: மறம் தான் அறக்கற்று அறிவோ டிருந்துஇரு வாதனையற்று: இருந்தான் பெருமையை என சொல்லுவேன்? கச்சி ஏகம்பனே!
2. கட்டி யணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன் வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால் கொட்டி முழக்கி அழுவார்: மயானம் குறுகி அப்பால் எட்டி அடிவைப்பரோ? இறைவா கச்சி ஏகம்பனே!
3. கைகப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையையெடுத்து அப்புறந் தன்னில் அசையாமல் முன் வைத்து அயல்வளவில் ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின் வந்து உறங்குவளை எப்படி நான் நம்பு வேன்? இறைவா! கச்சி ஏகம்பனே!
6. பொல்லா தவன், நெறி நில்லா தவன், ஐம் புலன்கள்தமை வெல்லா தவன், கல்வி கல்லாத வன், மெய் யடியவர்பால் செல்லாதவன், உண்மைசொல்லா தவன், நின் திருவடிக்கன்பு இல்லாதவன், மண்ணில் ஏன் பிறந்தேன்? கச்சி ஏகம்பனே!
7. பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை: பிறந்துமண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவ தில்லை: இடைநடுவில் குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்த தென்று கொடுக்கறியா(து) இறக்குங் குலாமருக்குஎன்சொல்லு வேன்? கச்சி ஏகம்பனே!
16. பருத்திப் பொதியினைப் போல வயிறு பருக்கத் தங்கள் துருத்திக்கு அறுசுவை போடுகின்றார்: துறந்தோர்தமக்கு இருத்தி அமுதிடமாட்டார். அவரை இம் மாநிலத்தில் இருத்திக்கொண்டு ஏன் இருந்தாய் இறைவா! கச்சி ஏகம்பனே!
17. பொல்லா இருளகற்றும் கதிர் கூகையென் புண்கண்ணினுக்கு அல்லா இருந்திடு மாறொக்கு மே அறி வோருளத்தில் வல்லார் அறிவார் அறியார் தமக்கு மயக்கங் கண்டாய்! எல்லாம் விழிமயக்கே இறைவா! கச்சி ஏகம்பனே!
24. நாவார வேண்டும் இதஞ்சொல்லு வார். உனை நான் பிரிந்தால் சாவேன் என் றேயிருந்தொக்கஉண்பார்கள்கை தான் வறண்டால் போய்வாரும் என்று நடுத்தலைக்கே குட்டும் பூவையர்க்கு ஈவார் தலைவீதியோ? இறைவா! கச்சி ஏகம்பனே!
34. நாறும்உடலை நரிப்பொதி சோற்றினை நான் தினமும் சோறுங் கறியும் நிரப்பிய பாண்டத்தைத்தோகையர் தம் கூறும் மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது ஏறும் படியருள் வாய் இறைவா! கச்சி ஏகம்பனே!
35. சொக்கிட்டு அரண்மனைப் புக்குள் திருடிய துட்டர்வந்து திக்குற்ற மன்னரைக் கேட்பது போல் சிவ நிந்தை செய்து மிக்குக் குருலிங்க சங்கமம் நிந்தித்து, வீடிச்சிக்கும் எக்குப் பெருத்தவர்க்கு என்சொல்லு வேன்? கச்சி ஏகம்பனே!
40. கொன்றேன் அனேகம் உயிரை எல்லாம் பின்பு கொன்று கொன்று தின்றேன் அதன்றியுந் தீங்குசெய்தேன் அது தீர்கஎன்றே நின்றேன் நின் சன்னதிக்கே அதனால் குற்றம் நீ பொறுப்பாய் என்றே உனை நம்பி னேன் இறைவா! கச்சி ஏகம்பனே!
41. ஊர் இருந்தென்? நல்லோர் இருந்தென்? உபகாரமுள்ள பேர் இருந்தென்? பெற்றதாய் இருந்தென்? மடப் பெண்கொடியாள் சீரிருந்தென்ன? நற்சிறப்பிருந்தென்ன? இத் தேயத்தினி லேறுந்தென்ன? வல்லாய் இறைவா கச்சி ஏகம்பனே!