பதிவு செய்த நாள்
03
டிச
2015
10:12
திருச்சி: திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜை நேற்று துவங்கியது. திருச்சி, மலைக்கோட்டை, தாயுமான ஸ்வாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, கடந்த, 2012ம் ஆண்டு திருப்பணி மேற்கொள்ள பாலாயம் செய்யப்பட்டது.
தாயுமான ஸ்வாமி, மட்டுவார் குழலம்மை விமானங்கள், சாலை கோபுரம், மாணிக்க விநாயகர் சன்னதி, ராஜகோபுரம், கருவறை விமானங்கள் ஆகியவற்றின் விக்ரகங்களில், 16.88 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகளும், மண்டபங்கள் மற்றும் தூண்களில் உள்ள ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டன. கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, 36 அடி உயர கொடி மரத்துக்கு, தங்க தகடுகள் பதிக்க உள்ளனர். கொடி மரத்தின் அடிப்பகுதியில் திசா விக்ரகங்கள், தங்கத் தகடில் செய்யும் பணி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைத்து ஸ்தபதிகள் செய்து வருகின்றனர்.
கோவிலில் நேற்று காலை, 9 மணிக்கு யாகசாலை அலங்காரம், பரிவார கலாகர்ஷணம் நடந்தது. யாகசாலை பூஜைக்கு தேவையான புனித நீரை, காவிரி ஆற்றில் இருந்து யானை மீது எடுத்து வந்தனர். பின், மாலை, 5 மணிக்கு கும்ப அலங்காரம் நடந்தது. 7.30 மணிக்கு மதுன லக்னத்தில் கலாகர்ஷணம், முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. இன்று, காலை, 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை, 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, நாளை, காலை, 8 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, மாலை, 5 மணிக்கு ஐந்தாம் கால யாசாலை பூஜை நடக்கிறது. வரும், 5ம் தேதி காலை, 8 மணிக்கு ஆறாம்கால யாகசாலை பூஜை, மாலை, 5 மணிக்கு ஏழாம் கால யாகசாலை பூஜை, 6ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. காலை, 6 மணிக்கு பூர்ணாஹூதியும், 7.30 மணிக்கு பூர்ணாஹூதி, கடம் புறப்பாடும், 8 மணிக்கு ராஜகோபுரங்களுக்கும், 9 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது.