பதிவு செய்த நாள்
07
டிச
2015
11:12
அவிநாசி: அத்திக்கடவு திட்டம் நிறைவேற வேண்டி, 1,008 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. திருப்பூரில் இயங்கி வரும், அறுபத்து மூவர் சமயப்பேரவை மற்றும் அவிநாசி ஓம் ஸ்ரீநந்தீஸ்வரா சேவா மடம் இணைந்து, 108 கோமாதா பூஜை, 1,008 திருவிளக்கு வழிபாடு ஆகியவற்றை, ஸ்ரீசெந்தூர் மஹாலில் நேற்று நடத்தின. கோமாதா பூஜையை, சிவலிங்கேஸ்வர சுவாமி மேற்கொண்டார். இதில், 108 பசுக்களுக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. மாலையில், 1,008 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. அவிநாசி, ஆட்டையாம்பாளையம், வெள்ளியம்பாளையம், செம்பியநல்லூர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். பூஜையை துவக்கி வைத்து, ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி பேசுகையில், ""திருவிளக்கு வழிபாடு மிகவும் புண்ணியம் வாய்ந்தது. நமது உடலை விளக்காக பாவித்து, ஜீவாத்மா, பரமாத்மா என, இரண்டையும் கலந்து, பரம்பொருளுக்கு அர்ப்பணம் செய்வதே இதன் பொருள். நெய் தீபம் ஏற்றினால், பல நன்மை உண்டாகும். காலை மற்றும் மாலை இருவேளையிலும், திருவிளக்கேற்றி பாராயணம் செய்தால், குடும்பத்தில் செல்வம், மகிழ்ச்சி அதிகரிக்கும், என்றார்.