சபரிமலை நடை அடைப்பு: பந்தளத்துக்கு புறப்பட்டது திருவாபரணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2016 11:01
சபரிமலை: மண்டல -மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவு பெற்று சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப்பட்டது. பந்தளம் மன்னர் பிரநிதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்த சடங்குகள் நடைபெற்றது.
சபரிமலையில் கடந்த 15-ம் தேதி மகரவிளக்கு விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் நடைபெற்றது. 16 முதல் 20 வரை தினமும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெற்றது. 19-ம் தேதி காலை 10 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று தொடர்ந்து மதியம் களபபூஜை நடைபெற்றது.20-ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், நெய்யபிஷேகம் நடக்கவில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் முடிவுற்றது. பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடைபெற்றது. செவ்வாடை அணிந்த பக்தர்கள் சாஸ்திர முறைப்படி இந்த பூஜையை நடத்தினர். நேற்று காலை ஐந்து மணிக்கு நடை திறந்து அபிஷேகம் கணபதிஹோமம் நடைபெற்றது. வழக்கமாக பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்பட்டு, அவரிடம் சாவி மற்றும் பணமுடிப்பு வழங்கப்படும். ஆனால் பந்தளம் மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் காரணமாக மன்னர் பிரதிநிதி இந்த முறை திருவாபரண பவனியுடன் வரவில்லை. இதனால் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி காலை 6.30 மணிக்கு நடை அடைத்து சாவியை சபரிமலை நிர்வாக அதிகாரி சோமசேகரன்நாயரிடம் கொடுத்தார். இதை தொடர்ந்து திருவாபரணம் பந்தளத்துக்கு புறப்பட்டது. இனி மாசி மாத பூஜைகளுக்காக வரும் பிப்.,13-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கிறது.