பதிவு செய்த நாள்
27
ஜன
2016
11:01
வடலுார்: வள்ளலார் சித்தி பெற்ற திருமாளிகையில், திருஅறை தரிசனம் நேற்று நடந்தது. வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா, கடந்த, 24ம் தேதி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதியை தரிசித்தனர். இதன் தொடர்ச்சியாக, வள்ளலார் சித்தி பெற்ற, திருமாளிகையில், திருஅறை தரிசனம் நேற்று நடந்தது. முன்னதாக, காலை, 7:00 மணிக்கு, தரும சாலையில் இருந்து, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழையை பல்லக்கில் வைத்து, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகைக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். வழியில், வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி இல்லம், அவர் வணங்கிய பெருமாள், பிள்ளையார் கோவில்கள், தீ சுவை ஓடை பகுதிகளில், பொதுமக்கள் பழத்தட்டுடன் ஆரத்தி எடுத்து, வரவேற்பு அளித்தனர். பல்லக்கை, மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், வள்ளலார் மறைந்த அறை முன் வைத்து, மதியம், 12:30 மணிக்கு, திருஅறை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மாலை, 6:00 மணி வரை தரிசனம் நடந்தது.