பதிவு செய்த நாள்
29
ஜன
2016
11:01
மைசூரு: கர்நாடகாவிலுள்ள பிரபலமான கோவில்களில், பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வர, இந்து அறநிலைய துறை தீர்மானித்துள்ளது. தற்போது கர்நாடக கோவில்களில், பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. அவரவர் விருப்பப்படி, மேற்கத்திய பாணியில் நாகரிக உடையணிந்து வர தடையில்லை. தமிழகம், கேரள மாநிலங்களின், சில பிரபலமான கோவில்களில், பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு ஏற்கனவே உள்ளது. அண்மையில், தமிழகத்தில் அமல்படுத்த அம்மாநில அரசு முனைந்துள்ளது. இதேபோன்று, கர்நாடகாவில் அதிக பக்தர்கள் வரும் முக்கியமான கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கொண்டு வர யோசனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி ஆண்கள் வேட்டி மட்டும் அணிந்து வர வேண்டும். மேல் சட்டை கூடாது. பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்து வர வேண்டும்.
முதற்கட்டமாக, உடுப்பி மாவட்டம், கொல்லுார் மூகாம்பிகா கோவில், தட்சிண கன்னட குக்கே சுப்ரமண்யா, காட்டில் துர்கா கோவில்கள், மைசூரு சாமுண்டீஸ்வரி, நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரா, துமகூரு எடியூர் சித்தலிங்கேஸ்வரா, பெலகாவி சவதத்தி எல்லம்மா ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆடை கட்டுப்பாடு விதிக்கலாமா என்பது குறித்து, சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்களுடன் இந்து அறநிலைய துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து, அறநிலைய துறை ஐ.ஏ.எஸ்., அதிகாரி பல்லவி அகுரதி கூறுகையில், “உடை கட்டுப்பாடு விரைவில் கர்நாடகாவில் உள்ள பிரபலமான, 10 கோவில்களில் நடைமுறை படுத்த ஆலோசித்து வருகிறோம். பஞ்சாயத்து தேர்தல் முடிந்தவுடன் முறையான அறிவிப்பு வெளியிடப்படும். கோவில்களில் ஆண், பெண்களுக்கான தனித்தனி வரிசைகள் ஏற்படுத்தப்படும்,” என்றார். கடந்த செப்டம்பரில், மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வர, நிர்வாகத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்து அறநிலைய துறை அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.