பதிவு செய்த நாள்
29
ஜன
2016
12:01
ஆர்.கே.பேட்டை: பைவலசா கிராமத்தில் இன்று காலை, ஐந்து கோவில்களில், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, பைவலசா கிராமத்தில், செல்வ விநாயகர், நவகிரகம், சீதா லட்சுமி உடனுறை ராமச்சந்திர சுவாமி, நுாக்காலம்மன், பொன்னியம்மன் ஆகிய ஐந்து கோவில்களில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. கோவில்களின் கட்டுமான பணிகள், ஓராண்டாக நடந்து வந்தன. பணிகள் முடிந்து, இன்று, காலை 7:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று, காலை 11:00 மணிக்கு, புதிய சிலைகள் கரிக்கோலம் ஊர்வலமும், அதை தொடர்ந்து, பிரதிஷ்டையும் நடந்தன. மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், இரவு 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் நடந்தன. இன்று, காலை 5:00 மணிக்கு, கோ பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து, 7:30 மணிக்கு, புனிதநீர் கலசங்கள் கோவில் கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 10:30 மணிக்கு, ஊரணி பொங்கல் வைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில், ஐந்து கோவில்களில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை ஒட்டி, கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.