பதிவு செய்த நாள்
03
பிப்
2016
12:02
திருநீர்மலை : திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், வாடகை பாக்கியாக, 1.50 கோடி ரூபாயை செலுத்தாமல் இழுத்தடித்து வருகிறது. பல முறை கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால், நிலத்தின் வாடகை உரிமத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 115 ஏக்கர் நிலம், கிராமத்தில் பல இடங்களில் உள்ளன. அதில், திருநீர்மலையில் இருந்து, தாம்பரம் கடப்பேரிக்கு செல்லும் சாலையை ஒட்டியுள்ள, 13 ஏக்கர் நிலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு மாத வாடகை அடிப்படையில், கடந்த 2014 பிப்ரவரி முதல் விடப்பட்டது. அந்த இடத்தில் கான்கிரீட் பிளான்ட் அமைத்து, அங்கிருந்து, தினசரி பல லாரிகளில் மெட்ரோ ரயில் பணிக்காக கான்கிரீட் எடுத்து செல்லப்படுகிறது.
கோவில் நிர்வாகத்திற்கு மாதந்தோறும், 10.20 லட்சம் ரூபாயை வாடகையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செலுத்த வேண்டும்; கடந்த 201௪, நவ.,20 முதல், 91.73 லட்சம் ரூபாயை வாடகையாக அந்நிறுவனம் செலுத்தியது. கடந்த, 14 மாதங்களாக வாடகை செலுத்தாமல், ரங்கநாத பெருமாள் கோவில் நிர்வாகத்திற்கு, நிதி இழப்பு ஏற்படுத்தி வருகிறது. 2015ம் ஆண்டு டிசம்பர் வரை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வைத்துள்ள நிலுவை தொகை, 1.௫0 கோடி ரூபாய் ஆகும். பலமுறை கோவில் நிர்வாகம் சார்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு, அந்நிறுவனம், வாடகை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என, பதில் கடிதம் எழுதுகிறது. இதற்கிடையில், மாதந்தோறும், 5ம் தேதிக்குள் வாடகை செலுத்தாமல், பல மாதங்களுக்கு சேர்த்து வாடகை செலுத்துவதால், வட்டி இழப்பு ஏற்படுத்தி வந்த காரணத்திற்காக, 10 சதவீத வட்டியுடன் சேர்த்து வாடகை செலுத்தவேண்டும். இவ்வாறு, கோவில் செயல் அலுவலர் குமரேசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். இனியும் வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வரும் பட்சத்தில், நிலத்தின் வாடகை உரிமத்தை ரத்து செய்து, நிலத்தை காலி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.