பதிவு செய்த நாள்
03
பிப்
2016
12:02
பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டி கிராம மக்கள் நுாறுஆண்டுகளுக்கு மேலாக இன்றும் மாட்டுவண்டிகளில் வந்து பழநி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். பழநியில் தைப்பூச விழா முடிந்தபின் குறிப்பிட்ட சமுதாய மக்கள், கிராமப்புறத்தினர் பலநுாறு ஆண்டுகளாக முன்னோர் கடைப்பிடித்த பாரம்பரிய பூஜைமுறைகள் மாறாமல் இன்றும் பழநிக்கு குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்துகின்றனர். காவடிகள், பால்குடங்கள் எடுத்தும், உடலில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பணிக்கம்பட்டி கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுவண்டிகளில் குடும்பத்துடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்தியும். அன்னதானம் வழங்கி வழிபாடுசெய்கின்றனர். பணிக்கம்பட்டி பக்தர்கள் அம்மணியப்பன்,65, மாரிமுத்து,55, கூறியதாவது: பலதலைமுறைகளாக தைப்பூச விழாவிற்கு நுாற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் பழநி வருகிறோம். ஊர் பெரியவர்கள் சார்பில் ஒவ்வொரு இடத்திலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாண்டு மாடுகள் பற்றாக்குறை காரணமாக 20 ரேக்ளா மாட்டு வண்டிகள், சைக்கிள், இருசக்கரவாகனம், ஆட்டோவில் ஏராளமானோர் வந்துள்ளோம். ஜன.,30ல் புறப்பட்டு பிப்.,1ல் சண்முகநதியில் நீராடி, அலகு குத்தியும், காவடிஎடுத்தும் ஆட்ட பாட்டத்துடன் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தோம். மீண்டும் இன்று(பிப்.,2) ஊர் திரும்புகிறோம்,” என்றனர்.