பதிவு செய்த நாள்
09
மார்
2016
04:03
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வணிக கட்டடம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டது. இக்கோயிலின் துணை கோயிலான வீரராகவப் பெருமாள் கோயில், தெற்கு மாசி வீதி எழுத்தாணிக்கார தெருவில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான வணிக கட்டடம் வி.நரேஷ் என்பவருக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டது. ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் கட்டடத்தை காலி செய்யாமல் ஆக்கிரமிப்பு செய்தார். காலி செய்ய இந்து சமய அறநிலைத்துறை சென்னை கமிஷனர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நரேஷ் மேல்முறையீடு செய்தார். விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பு வணிக கட்டடத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நரேஷூக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, கூடலழகர் கோயில் செயல் அலுவலர் அனிதா, தெற்குவாசல் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, வி.ஏ.ஓ., மூர்த்தி, கோயில் செயல் அலுவலர்கள் காசிவிஸ்வநாதன், மாலதி, ஜெயராமன், கண்காணிப்பாளர் அய்யர்சிவமணி, தெற்கு சரக ஆய்வர் முத்துராமலிங்கம், சோழவந்தான் ஆய்வர் ராதிகா, கோயில் பணியாளர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு வணிக கட்டடம் நேற்று மீட்கப்பட்டது.