பதிவு செய்த நாள்
10
மார்
2016
11:03
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது. சின்னதடாகம் - வீரபாண்டி ரோட்டில், பழமை வாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. 1926, ஜூன் 6ம் தேதி கடைசியாக கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் இக்கோவில் போதிய பராமரிப்பின்றி பொலிவிழந்தது. சில ஆண்டுகளுக்கு முன், கோவிலை புதுப்பித்து கட்டும் பணி துவங்கியது. தற்போது, கோவிலில் கரிவரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்க புதிய கருவறை கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபம், பாரிவார மூர்த்திகளுக்கு தனித்தனி சன்னதிகள் எழுப்பப்பட்டுள்ளன. அருள்மிகு சக்கரத்தாழ்வார், அருள்மிகு அனுமன் சுவாமிகளுக்கும் தனித்தனி கோவில்கள் உள்ளன. இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், கோவில் வளாகத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது. இதில், சின்னதடாகம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். 90 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் வைகாசி மாதம் கோவில் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, பக்தர் குழுவினர் தெரிவித்தனர்.