பதிவு செய்த நாள்
15
மார்
2016
11:03
காஞ்சிபுரம் : ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவத்திற்கு பொலிவூட்டும், நாட்டியம், வாண வேடிக்கை, சுவாமி வீதிஉலா வரிசையில், சாக்பீஸ் ஓவியமும் முக்கிய பங்கை வகிக்கிறது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தின் மிகப்பெரிய கோவிலான, ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம்.இதன் காரணமாகவே, இந்த பிரம்மோற்சவத்தை, பங்குனி உற்சவம் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் அழைக்கின்றனர். பங்குனி மாதம் நேற்று துவங்கிய நிலையில், பிரம்மோற்சவம் ுவங்கி உள்ளது. காஞ்சிபுரம் ராயன்குட்டை தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகியோர், கோவிலின் பிரகார நுழைவாயிலின் இருபுறமும், பிரம்மோற்சவத்தின் வடிவங்களை, சாக்பீஸ் கொண்டு, தத்ரூபமாக வரைந்து வருகின்றனர். கோவிலில் நுழையும் பக்தர்கள், இந்த பிரம்மோற்சவ ஓவியங்களை பார்த்து மகிழ்கின்றனர்.
பிரம்மோற்சவம் மட்டுமல்லாமல், சிவராத்திரி, பார் வேட்டை போன்ற சிறப்பு நாட்களிலும், உற்சவம் தொடர்பான ஓவியம், கோவில் வளாகத்தில் நிச்சயமாக இடம் பெறுகிறது. சாக்பீஸ் ஓவியம் வரைவதை வேடிக்கையாக கற்றுக்கொண்ட இவர்களின் படைப்புகள், காஞ்சிபுரம் நகரவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த ஓவியங்களை பார்க்கும் வெளியூர்வாசிகள், பிரம்மோற்சவ உற்சவங்கள் இப்படித்தான் இருக்கும் என அறிந்துகொள்ள முடிகிறது.