பதிவு செய்த நாள்
16
மார்
2016
12:03
காரைக்குடி:பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று தொடங்கியதை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாணவர்கள் பெற்றோருடன் வந்து வழிபட்டு சென்றனர்.
10ம் வகுப்பு பொது தேர்வு நேற்று தொடங்கியது. தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 5,752 மாணவர்கள், 5,275 மாணவிகள் என மொத்தம் 11,027 பேர் பதிவு செய்தனர். இதில், 43 மாணவர்கள், 25 மாணவிகள் ஆப்சென்ட் ஆகினர். 102 மாணவர்கள், 26 மாணவிகள் தனித்தேர்வுக்காக விண்ணப்பித்தனர். 6 மாணவர்கள், மூன்று மாணவிகள் ஆப்சென்ட். மொத்தம் 41 தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதினர். பாடநூல் இயக்குனர் கார்மேகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில் ஆறு பறக்கும் படை, 11 வழித்தட அலுவலர்கள், 51 நிலையான படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காரைக்குடி கொப்புடையம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில், குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில், நகர சிவன்கோயில், செக்காலை சிவன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாணவர்கள், பெற்றோருடன் வந்து பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வைத்து வழிபட்டனர். டப்பாவுக்கு தடை: மாணவர்கள் எழுது பொருட்களை டப்பா, பவுச் உள்ளிட்டவைகளில் வைத்து கொண்டு வரக்கூடாது என, கல்வித்துறை உத்தரவிட்டிருந்ததால், ரப்பரால் பிணைத்து கொண்டு வந்திருந்தனர். ஷூ அணிந்து வந்தால், பறக்கும் படையினர் வரும்போது வீணான சந்தேகம் வரும் என்பதால், செருப்பு அணிந்து பெரும்பாலும் மாணவர்கள் வந்தனர். அதையும் தேர்வு அறைக்கு வெளியேயே கழட்டி விட்டு சென்றனர்.