பதிவு செய்த நாள்
18
மார்
2016
11:03
திருப்பூர்: திருப்பூர் மாஸ்கோ நகர், சரளைக்காடு வெள்ளை விநாயகர், பண்ணாரி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு, பொங்கல் விழா, பொரி மாற்றுதல் பூஜையுடன், 14ல் துவங்கியது. மறுநாள், அபிஷேக அலங்கார பூஜையுடன், சக்தி கரகம் எடுத்து வந்து, கம்பம் நடப்பட்டது. நேற்று முன்தினம் ஞானபிரகாசம் வீதி, சரளைக்காடு, மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் இருந்து பட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றப்பட்டது; இரவு அம்மை அழைத்தல் பூஜை நடைபெற்றது. நேற்று காலை, மாவிளக்குகளை அம்மன் முன் வைத்து சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டது; பெண்கள் பொங்கல் வைத்தனர். மதியம் உச்சிகால பூஜையை தொடர்ந்து, கிடாய் வெட்டப்பட்டது. பண்ணாரி அம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மாலையில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந் தது. இன்று காலை அபிஷேக பூஜை, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.