பதிவு செய்த நாள்
25
மார்
2016
12:03
நாமக்கல்: நரசிம்மர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. நாமக்கல் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. நரசிம்மர் கோவில் எதிரில், 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி உள்ளார். கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன் தினம் வரை, நாள்தோறும், காலை, நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் சுவாமி திருவீதி உலாவும், கமலாலயக் குளக்கரை கோவில் மண்டபத்தில் ஸ்நபனத் திருமஞ்சனம், இரவு, மீண்டும் திருவீதி உலா நடக்கிறது. நேற்று, காலை, 9 மணிக்கு, பேட்டையில் உள்ள ரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் மற்றும் ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடந்தது. விழாவை முன்னிட்டு அரங்கநாதர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்யப்பட்டது. நாமக்கல் கலெக்டர் தட்சணாமூர்த்தி, மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் துவங்கிய இடத்தில் வந்து நிலை நிறுத்தப்பட்டது.