பதிவு செய்த நாள்
01
ஏப்
2016
11:04
தேர்தலை காரணம் காட்டி போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் கோவில் திருவிழாவுக்கு தடை விதிப்பதாக பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட, வியாசர்பாடி, பி.வி.காலனியில், பீலிக்கான் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலில், 51ம் ஆண்டு, சித்திரை திருவிழா, ஏப்., 22ம் தேதி துவங்கி, மே 1ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தேர்தல் பணிகள் நடந்து வருவதால், திருவிழாவை நடத்த கூடாது என, மாநகராட்சி அதிகாரிகள் கூறுவதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, பர்மா தமிழர் முன்னேற்ற சங்க ஆலோசகர் ராஜூ கூறியதாவது:தேர்தல் நேரத்தில், கோவில் திருவிழா நடத்த கூடாது என, எந்த விதியும் இல்லை. பீலிக்கான் முனிஸ்வரர் கோவிலில் திருவிழா நடத்த கூடாது என, மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளித்துள்ளோம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, அனுமதி தரும் அதிகாரிகள், இந்த கோவிலின் சித்திரை திருவிழாவுக்கு தடைவிதிப்பதில் நியாயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.