பதிவு செய்த நாள்
04
ஏப்
2016
12:04
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் திருடர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்க, கடந்தாண்டை போல் இந்த ஆண்டும் சில நுாதன நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இத்திருவிழா ஏப்.,10ல் துவங்குகிறது. முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, ஆற்றில் இறங்குதல் நிகழ்ச்சியை பயன்படுத்தி, திருடர்கள் கைவரிசை காட்ட வாய்ப்புள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாலும், சில ஆண்டுகளாக நகை திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளன. அதேசமயம், கள்ளழகர் எதிர்சேவை, ஆற்றில் இறங்குதல், ராமாயணச் சாவடிக்கு செல்லுதல், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சியன்று அதிகளவில் நகை திருட்டுகள் நடக்கின்றன. கடந்தாண்டை போல், இந்த ஆண்டும் கைவரிசை காட்ட, வெளியூர்களிலிருந்து சில கும்பல் குடும்பத்துடன் மதுரையில் களம் இறங்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இக்கும்பலின் ஸ்டைல், மக்களோடு மக்களாக நின்று, நோட்டம் விட்டு, கூட்டத்தை பயன்படுத்தி, கழுத்தில் இருக்கும் நகையை லாவகமாக திருடுவது. குறிப்பாக, குழந்தையுடன் நிற்கும் பெண்கள், வயதானவர்கள் தான் இவர்களது இலக்கு. திருவிழா நடக்கும் இடங்களில் இவர்கள் வியாபாரிகள் போல் வலம் வருவர். இந்தாண்டு திருட்டை கட்டுப்படுத்த, குற்றப்பிரிவு போலீசாரை சாதாரண உடையில் மக்களுடன் நடமாட செய்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெண் போலீஸ் சிலருக்கு நகைகளை அணிவித்து, கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே திருட்டையே தொழிலாக கொண்டவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யவும் போலீசார் தயாராகி வருகின்றனர்.